பூமிபூஜை போட்ட பகுதியில் சாலை அமைக்கக்கோரி எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
பவானி அருகே பூமிபூஜை போட்ட இடத்தில் சாலை அமைக்கக்கோரி எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
பவானி
பவானி அருகே பூமிபூஜை போட்ட இடத்தில் சாலை அமைக்கக்கோரி எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
பூமி பூஜை
பவானி அடுத்துள்ள மயிலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மோளகவுண்டன்புதூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை அமைக்கக்கோரி பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மனு வழங்கியதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து மோளகவுண்டன்புதூரிலிருந்து, மொடாக்கட்டித்தோட்டம் வழியாக போத்த நாய்க்கன்புதூருக்கு புதிய தார் சாலை அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் கே.சி. கருப்பணன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் சாலை அமைக்க ஜல்லிகள் வந்து கொட்டப்பட்டன.
சிறைபிடிப்பு
இந்தநிலையில் அந்த பகுதியில் சாலை அமைக்காமல் வேறு ஒரு பகுதியில் சாைல அமைக்கும் பணி நடந்ததாக தெரிகிறது.
இதனை அறிந்த மோளகவுண்டன்புதூர் பொதுமக்கள் ஒப்பந்ததாரரிடம் முதலில் எங்கள் பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என்றார்கள். அதற்கு அவர் உங்கள் பகுதிக்கான ஒப்பந்தம் இன்னும் வரவில்லை. அதனால் பணிகள் தொடங்கவில்லை. அதனால் அதுவரை பொறுமையாக இருங்கள் என்றார்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை அமைக்க பயன்படுத்திய எந்திரத்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பவானி போலீசாரும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது உங்கள் பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்கள்.
இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் எந்திரத்தை விடுவித்து கலைந்து சென்றார்கள்.