நடுரோட்டில் அமர்ந்து போராட்டம்: கவர்னர் மாளிகை அருகே நாராயணசாமி, கந்தசாமி திடீர் தர்ணா; துணை ராணுவத்தினருடன் தள்ளுமுள்ளு- பரபரப்பு

கவர்னர் மாளிகை அருகே முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது துணை ராணுவத்தினருடன் தள்ளுமுள்ளு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-01-19 22:35 GMT
பாரதி பூங்கா அருகே முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் நடுரோட்டில் தர்ணா நடத்திய போது
சட்டசபையில் தர்ணா
கவர்னர் கிரண்பெடி மக்கள் நல திட்டங்களை தடுப்பதாகவும், அவரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை அண்ணா சிலை அருகே தர்ணா போராட்டம் நடந்தது.

இந்த போராட்டம் நிறைவடைந்த நிலையில் 10-ந்தேதி இரவே அமைச்சர் கந்தசாமி சட்டசபை வளாகத்தில் கவர்னர் கிரண்பெடியை கண்டித்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.

கூடுதலாக 10 ஆயிரம் பயனாளிகளுக்கு முதியோர் பென்‌‌ஷன் வழங்குவது, ஏழை பெண்கள் திருமண உதவித்தொகை நிதி ரூ.75 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்துவது உள்ளிட்ட 36 கோப்புகளுக்கு கவர்னர் அனுமதி அளிக்கவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக விவாதிக்க நேரம் ஒதுக்குமாறும் கவர்னருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

அரசியல் பரபரப்பு
இதற்கு பதில் அளித்த கவர்னர் கிரண்பெடி கோப்புகள் தொடர்பாக தலைமை செயலாளரிடம் பேசுமாறு கூறியிருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் தன்னிடம் நிலுவையில் எந்த கோப்புகளும் இல்லை என்று மற்றொரு கடிதத்தை அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் பேசிய அமைச்சர் கந்தசாமி, தானே நேரடியாக கவர்னர் மாளிகைக்கு செல்லப்போவதாக அறிவித்தார். இதனால் புதுவை அரசியல் பரபரப்புக்குள்ளானது.

திடீர் சம்பவம்
இத்தகைய சூழலில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரனை சந்திக்க முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன், அமைச்சர் கந்தசாமி வந்திருந்தார். இருவரும் உடல்நலம் விசாரித்துவிட்டு அங்கிருந்து தனித்தனி காரில் புறப்பட்டனர்.

சட்டசபைக்குத்தான் அவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அமைச்சர் கந்தசாமியின் கார் குபேர் சிலை நோக்கி சென்றது. அங்கிருந்து கவர்னர் மாளிகை நோக்கி அமைச்சர் கந்தசாமியின் கார் திரும்பியது. அதன்பின்னரே ஏதோ சம்பவம் நடக்கப்போகிறது என்பதை அறிந்து போலீசார் உ‌ஷாரானார்கள்.

கவர்னர் மாளிகை முன்...
ஆனால் அதற்குள் அமைச்சர் கந்தசாமியின் கார் கவர்னர் மாளிகையை நெருங்கியது. கவர்னர் மாளிகை வாசலில் இடதுபுறமாக போடப்பட்டிருந்த தடுப்பு அருகே சென்று காரில் இருந்து இறங்கிய அமைச்சர் கந்தசாமி அங்கேயே ரோட்டில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா ேகாத்ரா தடுக்க முயன்றார். ஆனால் அமைச்சர் கந்தசாமியுடன் வந்த வக்கீல் சிபி போன்றவர்கள் அமைச்சரை யாரும் தொடக்கூடாது. தொட்டால் வீணாக பிரச்சினை ஏற்படும் என்று எச்சரித்தனர். இதனால் போலீசார் பின்வாங்கினார்கள்.

துணை ராணுவம் குவிப்பு
தொடர்ந்து அமைச்சர் கந்தசாமி தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா, துணை கலெக்டர் சுதாகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர் கந்தசாமி தனது போராட்டத்தை தொடர்ந்தார்.

அமைச்சர் அருகே துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பகல் 11 மணிக்கு தொடங்கிய அமைச்சரின் போராட்டம் பிற்பகலிலும் நீடித்தது. போராட்ட இடத்திலேயே அமைச்சர் கந்தசாமி வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட மதிய உணவினை சாப்பிட்டார். இதனால் கவர்னர் மாளிகை அருகே பரபரப்பு காணப்பட்டது.

அங்கு ஏ.டி.ஜி.பி. ஆனந்த்மோகன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அமைச்சரை சந்திக்க அவரது ஆதரவாளர்கள் அங்கு வந்தனர். ஆனால் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

இந்தநிலையில் அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

நேரம் தராததால் பிரச்சினை
புதுச்சேரி மக்களுக்காக போராட்டம் நடத்துகிறேன். ஒரு அமைச்சரான நான் எனது துறைகள் தொடர்பான கோப்புகள் சம்பந்தமாக விவாதிக்க கவர்னரிடம் நேரம் கேட்டேன்.

இதற்காக எனது போராட்டம் 10-வது நாளாக தொடர்கிறது. ஆனால் கவர்னர் என்னை அழைத்து பேசவில்லை. தலைமை செயலாளரிடம் பேச சொல்கிறார். தலைமை செயலாளர், அரசு செயலாளர்களை அழைத்து நானே பேசுவேன். பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டியது கவர்னரிடம் தான். அதனால்தான் அவருடன் பேச நேரம் கேட்டேன். ஆனால் அவர் நேரம் கொடுக்காததால்தான் இந்த பிரச்சினை வந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

தள்ளுமுள்ளு
அமைச்சர் கந்தசாமி போராட்டம் குறித்து அறிந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி அவரை சந்திக்க சட்டசபையில் இருந்து அமைச்சர் மல்லாடிகிரு‌‌ஷ்ணாராவ், வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி ஆகியோருடன் புறப்பட்டார். வர்த்தக சபை வழியாக அவர்கள் நடந்தே வந்தனர். குபேர் சிலை அருகே வந்தபோது (பாரதி பூங்கா பெருமாள் கோவில்) போலீசாரும், துணை ராணுவப்படையினரும் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினார்கள். அமைச்சரை சந்திக்க அனுமதி மறுத்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களுடன் வந்தவர்கள் போலீஸ், துணை ராணுவப்படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தடுப்புகளை தள்ளிவிட்டதை தொடர்ந்து தள்ளுமுள்ளுவில் இறங்கினர்.

நடுரோட்டில் தர்ணா
மோதலில் ஈடுபட்டவர்களை நாராயணசாமி சமரசப்படுத்தினர். இதன்பின் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினரின் நடவடிக்கையை கண்டித்து நடுரோட்டில் அமர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்து காங்கிரசார் திரண்டு வந்து சேர்ந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், விஜயவேணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் செயலாளர் பெருமாள் உள்ளிட்டோரும் அங்கு விரைந்து வந்தனர்.

கந்தசாமியுடன் சந்திப்பு
அங்கு கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக அவர்கள் கோ‌‌ஷங்களை எழுப்பினார்கள். கவர்னரே திரும்பிப்போ என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர். மாலை 4 மணியளவில் அங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா, துணை கலெக்டர் சுதாகர் ஆகியோர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

இதன்பின் மாலை 5 மணியளவில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை மட்டும் அமைச்சர் கந்தசாமியை சந்திக்க அழைத்துச் சென்றனர். மற்றவர்கள் அனைவரும் அங்கேயே அமர்ந்திருந்தனர்.

பரபரப்பு
அமைச்சர் கந்தசாமியிடம் போராட்டத்தை கைவிடுமாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று அமைச்சர் கந்தசாமி தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

கவர்னர் மாளிகை அருகே முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர் கந்தசாமியும் நடத்திய திடீர் தர்ணா போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்