காலநிலை மாற்றத்தால் ஊட்டியில் மீண்டும் உறைபனி தாக்கம் தொடக்கம் - குறைந்தபட்ச வெப்பநிலை 5.6 டிகிரி செல்சியசாக பதிவு

காலநிலை மாற்றத்தால் ஊட்டியில் மீண்டும் உறைபனி தாக்கம் தொடங்கி உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 5.6 டிகிரி செல்சியசாக பதிவானது.

Update: 2021-01-19 17:36 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். இதை தொடர்ந்து டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்காலம் நிலவுவது வழக்கம். சமீப நாட்களாக ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் கடந்த டிசம்பர் மாதம் ஓரிரு நாட்கள் மட்டுமே உறைபனி தாக்கம் காணப்பட்டது. பின்னர் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது. மேலும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை ஊட்டி பிங்கர்போஸ்ட், எச்.பி.எப்., காந்தல் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் புல்வெளிகளின் மீது உறை பனி படர்ந்து இருந்தது. வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரின் முகப்பு கண்ணாடியில் வெள்ளை கம்பளம் விரித்தது போல் உறைபனி காணப்பட்டது. இதனால் கடும் குளிர் நிலவியது. காந்தல் முக்கோணம் விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள் புல்வெளிகளில் உறைபனி படர்ந்து இருப்பதை கண்டு ரசித்தனர். ஊட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியசாக இருந்தது.

நேற்று அதிகபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 5.6 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. வெப்பநிலை மிகவும் குறைந்ததால் வழக்கத்துக்கு மாறாக குளிர் அதிகமாக இருந்தது. உறைபனி தாக்கம் காரணமாக வீடுகளில் சமையல் மற்றும் பிற பயன்பாட்டுக்காக தண்ணீர் சூடாக நீண்ட நேரம் ஆகிறது. குளிரால் வெது, வெதுப்பான தண்ணீரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். உறைபனி தாக்கம் மீண்டும் தொடங்கி உள்ளதால் புற்கள் மற்றும் தேயிலை செடிகள் கருகும் அபாய நிலை உள்ளது. இதனால் தேயிலை மற்றும் மலைக்காய்கறி விவசாயிகள் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். காலநிலை மாற்றத்தால் காலதாமதமாக உறைபனி தாக்கம் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்