வத்திராயிருப்பு பகுதியில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
வத்திராயிருப்பு பகுதியில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, கன்சாபுரம், சுந்தரபாண்டியம், நெடுங்குளம், சேதுநாராயணபுரம், கிழவன் கோவில், மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்தநிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் இப்பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து மழைநீரில் மூழ்கின. மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் முளைக்கவும் ஆரம்பித்து விட்டன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கடந்த சில நாட்களாக பெய்த மழையால் இப்பகுதியில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்து மூழ்கி விட்டன.
மூழ்கிய நெற்பயிர்கள் வயலிலேயே முளைக்க ஆரம்பித்து விட்டது. இதனால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆதலால் வங்கிகளில் வாங்கிய கடன்களை கட்டுவதற்கு வழி தெரியாமல் தவித்து வருகிறோம்.
எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.