தா.பழூரில் பூட்டியிருந்த பள்ளி கட்டிடத்தில் தஞ்சமடைந்த வெளிநாட்டு ஆந்தைகள்
தா.பழூாில் பூட்டியிருந்த பள்ளி கட்டிடத்தில் வெளிநாட்டு ஆந்தைகள் தஞ்சமடைந்தன
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, வகுப்பறைகள் பூட்டப்பட்டன. கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து, இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்காக பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள 2 மாடிக்கட்டிடத்தின் ஒரு பகுதியில் நூலகம் செயல்பட்டு வருகிறது. நூலக கட்டிடத்தின் ஒரு பகுதியில் பறவைகளின் எச்சம் அதிகமாக காணப்பட்டது. நேற்று தூய்மை பணிக்காக வந்த ஆசிரியர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அங்கு 2 ஆந்தைகள் இருந்தன. அவை சற்று பெரிய அளவில் காணப்பட்டன. ஆனால் அவற்றுக்கு சிறகுகள் முளைக்காததால் அவற்றால் எங்கும் பறந்து செல்ல முடியவில்லை. நமது நாட்டில் இருக்கும் ஆந்தைகள் சிறியதாக இருக்கும்போதே சிறகுகளோடு காணப்படும். ஆனால் இவை பெரிதாக வளர்ந்த பின்னும் சிறகுகள் இல்லாததால் வெளிநாட்டு ஆந்தைகளாக இருக்கலாம் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இனப்பெருக்க காலத்திற்காக வெளிநாட்டில் இருந்து இடம்பெயர்ந்து வந்த இந்த ஆந்தைகள் பள்ளி கட்டிடத்தில் தஞ்சம் அடைந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 குஞ்சுகள் பள்ளி நூலக கட்டிடத்தில் இருக்கும் நிலையில், அவற்றின் தாய்ப்பறவை எங்கு சென்றது என்பது தெரியவில்லை.