15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது.

Update: 2021-01-10 04:53 GMT
நாகர்கோவில்,

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நீதிபதி பொன்.கலையரசன் பரிந்துரைப்படி 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். அதில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாக 5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.தர்ணா போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் மரியமிக்கேல் தலைமை தாங்கினார். சேவியர் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் வரவேற்று பேசினார். முன்னாள் மாநில பொதுச்செயலாளர் பாலசந்தர் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில அமைப்புச்செயலாளர் நாகராஜன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் வள்ளிவேலு உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன் சிறப்புரையாற்றினார். ஓய்வுபெற்ற பள்ளி- கல்லூரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் முரளீதரன் நிறைவுரையாற்றினார். முடிவில் சுமஹாசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்