விலையில்லா அரிசியில் புழுக்கள் கிடந்ததால் ஆத்திரம்: அரிசி மூட்டையை சாலையில் வீசி சென்ற பொதுமக்கள்

நாகை அருகே ரே‌‌ஷனில் வழங்கிய விலையில்லா அரிசியில் புழுக்கள் கிடந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அரிசி மூட்டையை சாலையில் வீசி சென்றனர். தொடர்ந்து இதேபோல் அரிசி வழங்கினால் கடைக்கு பூட்டு போடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

Update: 2021-01-10 03:15 GMT
நாகப்பட்டினம்,

நாகை அருகே டாடா நகர், சேவாபாரதி மீனவ கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். டாடா நகரில் உள்ள ரே‌‌ஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடையில் கடந்த சில மாதங்களாக வழங்கப்படும் விலையில்லா அரிசியில் புழுக்கள் கிடந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் ரே‌‌ஷன் கடை ஊழியரிடம் முறையிட்டனர். அதற்கு அவர், அடுத்த மாதம் வழங்கப்படும் அரிசியில் புழுக்கள் இருக்காது என்று கூறியுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் அந்த அரிசியை வாங்கி சென்றனர்.

மூட்டையை சாலையில் வீசி சென்றனர்

இந்த நிலையில் நேற்று அந்த ரே‌‌ஷன் கடையில் வழங்கிய விலையில்லா அரிசியில் அதிக அளவில் புழுக்கள் இருந்தது. மேலும் துர்நாற்றம் வீசியது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் மீண்டும் ரே‌‌ஷன் கடை ஊழியரிடம் இது தொடர்பாக புகார் கூறினர். அவர் சரியாக பதில் அளிக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், ரே‌‌ஷன் கடையில் வாங்கிய அரிசியை மூட்டையுடன் சாலையில் தூக்கி வீசினர்.

கடைக்கு பூட்டு போடுவோம்

தொடர்ந்து இதேபோல் பயன்படுத்த முடியாத பொருட்களை மீண்டும் வினியோகம் செய்தால் ரே‌‌ஷன் கடைக்கு பூட்டு போடுவோம் என எச்சரித்து விட்டு பொதுமக்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

ரே‌‌ஷனில் வழங்கிய அரிசியில் புழுக்கள் கிடந்தால் அரிசி மூட்டையை பொதுமக்கள் சாலையில் வீசிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்