கர்நாடகா கொப்பல் அருகே வாலிபரை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது; கமலாபுரா வனஉயிரியல் பூங்காவில் விடப்பட்டது.

கொப்பல் அருகே வாலிபரை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது. அந்த சிறுத்தை, கமலாபுரா வன உயிரியல் பூங்காவில் விடப்பட்டுள்ளது.

Update: 2021-01-10 02:02 GMT
பிடிபட்ட சிறுத்தையை படத்தில் காணலாம்.
வாலிபரை கொன்ற சிறுத்தை
கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா கனககிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 20 நாட்களாக ஒரு சிறுத்தை தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. மேலும் கனககிரி அருகே வசித்து வந்த ராகவேந்திரா (வயது 20) என்ற வாலிபரையும் சிறுத்தை தாக்கி கொன்று இருந்தது. இந்த நிலையில் வாலிபரை கொன்ற சிறுத்தையை பிடிக்க கோரியும், வாலிபரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கோரியும் உறவினர்கள் போராட்டம் நடத்தி இருந்தனர்.

மேலும் உயிர் பலி வாங்கி வரும் சிறுத்தையை சுட்டுக்கொல்வதை தவிர வேறு வழியில்லை என்று வனத்துறை மந்திரி ஆனந்த்சிங்கும் கூறி இருந்தார். இதனால் சிறுத்தை உயிருடன் பிடிக்கப்படுமா அல்லது சுட்டுக்கொல்லப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது. மேலும் சிறுத்தையை பிடிக்க கும்கி யானைகளும் ஈடுபடுத்தப்பட்டன.

கூண்டில் சிக்கியது
இந்த நிலையில் கனககிரி அருகே ஆதிவபாவி கிராமத்தில் வனத்துறையினர் இரும்பு கூண்டும் வைத்து இருந்தனர். அந்த கூண்டில் பொறியாக நாயையும் கட்டி போட்டு இருந்தனர். மேலும் வனப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களின் மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தையும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் வசமாக சிக்கி கொண்டது. இதுபற்றி அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கூண்டில் சிக்கிய சிறுத்தையை பார்வையிட்டனர். சிறுத்தை கூண்டில் சிக்கியது பற்றி அறிந்ததும் ஹீலசனஹட்டி, சோமசாகரா, ஆதிவபாவி கிராமங்களை சேர்ந்த மக்களும் சிறுத்தையை பார்வையிட அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. பின்னர் கூண்டுடன் சிறுத்தையை வனத்துறையினர் லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்.

கமலாபுரா வன உயிரியல் பூங்கா
இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, பிடிபட்டது 4 வயது நிரம்பிய ஆண் சிறுத்தையாகும். பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டை தாலுகா கமலாபுராவில் உள்ள வனஉயிரியல் பூங்காவில் விடப்படும் என்று கூறினர். அதுபோல பிடிபட்ட சிறுத்தை வனஉயிரியல் பூங்காவில் விடப்பட்டது. தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை பிடிபட்டதால் கனககிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்