நொய்யல் அருகே மொபட் மீது கார் மோதி தம்பதி பலி மகள் வீட்டிற்கு வந்தபோது பரிதாபம்

நொய்யல் அருகே மொபட்டில் மகள் வீட்டிற்கு வந்த தம்பதி கார் மோதி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-01-10 01:29 GMT
நொய்யல்,

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா ஜோடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் லிங்கப்பன் என்கிற ராமலிங்கம் (வயது 70). இவரது மனைவி மீனாட்சி (65). இவர்களது மகள் வசந்தியின் வீடு கரூர் மாவட்டம் மேல்ஒரத்தை அருகே உள்ள ஆவரங்காட்டுப்புதூரில் உள்ளது.

இந்நிலையில் வசந்தியை பார்ப்பதற்காக ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகியோர் கொத்தமங்கலத்தில் இருந்து மொபட்டில் ஆவரங்காட்டுப்புதூருக்கு வந்து கொண்டிருந்தனர்.

நொய்யல் அருகே சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆவரங்காட்டுப்புதூர் பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக வலதுபுறமாக ராமலிங்கம் தனது மொபட்டை திருப்பினார். அப்போது பின்னால் பெங்களூருவில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாகவந்த கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.

தம்பதி பலி

இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமலிங்கம்-மீனாட்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் ேவலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, கார் டிரைவர் பெங்களூருவை சேர்ந்த சுதர்சன் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்திவருன்றனர்.

மேலும் செய்திகள்