வண்டலூர் பூங்காவில் முதுமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புலிக்குட்டி உயிரிழந்தது
முதுமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புலிக்குட்டி ஒன்று சென்னை வண்டலூர் பூங்காவில் திடீரென உயிரிழந்தது.
புலிக்குட்டிகள் மீட்பு
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனச்சரகத்தில் உள்ள சீமர்குழி ஓடை பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 21-ந்தேதி 7 வயது மதிக்கத்தக்க பெண் புலி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அதன் அருகே பிறந்து சில நாட்களே ஆன 2 ஆண் புலிக்குட்டிகள் சுற்றிக் கொண்டிருந்தன.
இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த புலிக்குட்டிகளை மீட்டு, கடந்த நவம்பர் மாதம் 23-ந்தேதி இரவு வண்டலூர் பூங்காவில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்த 2 புலிக்குட்டிகளையும் சிறப்பு விலங்குகள் சிகிச்சை மையத்தில் வைத்து பூங்கா அதிகாரிகள் வளர்த்தனர்.
மேலும், 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் புலிக்குட்டிகளின் அசைவுகளை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்காக மருந்துகள் வழங்கப்பட்டது.
ஆண் புலிக்குட்டி இறந்தது
இந்த நிலையில் 2 புலிக்குட்டிகளில் ஒரு ஆண் புலிக்குட்டி கடந்த சில நாட்களாக உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டு மிகவும் மெலிந்து காணப்பட்டது. இதனையடுத்து பூங்கா மருத்துவர்கள் உடனடியாக அந்த புலிக்குட்டியை தனிமைப்படுத்தி அதற்கு தேவையான சிகிச்சைகளை சிறப்பு மருத்துவ குழுவினர் மூலம் அளித்து வந்தனர்.
இதற்கிடையே தொடர் சிகிச்சையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாமல் கடந்த 5-ந்தேதி சுமார் 60 நாட்களான ஆண் புலிக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து பூங்கா மருத்துவர்கள் புலிக்குட்டியை பிரேதபரிசோதனை செய்த பிறகு பூங்கா வளாகத்தில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டினர்.