கிராமசபை கூட்டம் என்ற பெயரில் தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது- தளவாய்சுந்தரம் குற்றச்சாட்டு

கிராமசபை கூட்டங்கள் என்ற பெயரில் தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது என தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் குற்றம்சாட்டினார்.

Update: 2021-01-09 17:10 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே மகாராஜபுரம் பஞ்சாயத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மகாராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் நீலபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் காட்வின் ஏசுதாஸ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் 550 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச, வேட்டி சேலைகளை வழங்கி தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா காலத்திலும் தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு இந்த ஆண்டு முழு கரும்பு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முந்திரி பருப்பு, ஏலக்காய் மற்றும் உலர் திராட்சை போன்றவையுடன் 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கமும் வழங்குகிறது. அடுத்த ஆண்டு இந்த பொங்கல் பரிசு தொகை 500 ரூபாய் அதிகரித்து ரூ.3 ஆயிரமாக கிடைக்க வேண்டுமானால் வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரியுங்கள்.

மகாராஜபுரம் பஞ்சாயத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு உள்ளார். தி.மு.க., கிராமங்கள்தோறும் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் கூட்டங்களை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறது. மக்களே எங்கள் பக்கம் இருக்கும் போது தி.மு.க. யாரை கூட்டி இந்த கூட்டத்தை நடத்துகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் தான் கிராமங்கள் வளர்ச்சி அடைந்தது. வரும் தேர்தலிலும் தி.மு.க.வை மக்கள் புறக்கணிப்பது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மகாராஜபுரம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் ராஜம், அனீஸ்வரி, பாலஜோதி, சிவராஜன், சுயம்புலிங்கம், கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் சுரேஷ், கொட்டாரம் பேரூர் அ.தி.மு.க. இளைஞர் பாசறை தலைவர் கார்த்திக்குமார், செயலாளர் அய்யம்பெருமாள், மாவட்ட வக்கீல் பிரிவு துணைசெயலாளர் பாலன், கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்