நுரையீரலில் நிலக்கடலை சிக்கியதால் உயிருக்கு போராடிய 2 வயது குழந்தை - நவீன கருவியால் வெளியே எடுத்து உயிரை காத்த தஞ்சை அரசு மருத்துவமனை டாக்டர்கள்

நுரையீரல் பகுதியில் சிக்கிய நிலக்கடலையை நவீன கருவி மூலம் வெளியே எடுத்து 2 வயது குழந்தையின் உயிரை தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை டாக்டர்கள் காப்பாற்றினர்.

Update: 2021-01-09 14:53 GMT
தஞ்சாவூர்,

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே உள்ள பெரியகண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண். ஓவியரான இவர், சுவர் ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா. இவர்களுடைய 2 வயது மகள் அனுமித்ரா. கடந்த 6-ந் தேதி நண்பகல் 12 மணியளவில் அனுமித்ரா, நிலக்கடலை எடுத்து தின்றாள்.

நிலக்கடலையை வேகமாக சாப்பிட்டதால், நெஞ்சுப்பகுதியில் உள்ள உணவுக்குழாயில் நிலக்கடலை சிக்கி கொண்டது. இதனால் குழந்தை மூச்சுவிட முடியாமல் மிகவும் சிரமப்பட்டது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக தங்களது குழந்தையை தூக்கிக் கொண்டு திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், அனுமித்ராவை பரிசோதித்து விட்டு, மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரை செய்தனர்.இதனால் அவரை அவசரமாக நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றபோது, குழந்தைக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே சென்றது.

மேலும் உயிருக்கும் ஆபத்தான நிலை ஏற்பட்டதால் உடனடியாக அனுமித்ராவுக்கு, வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். மகளின் நிலையை பார்த்து கதறி அழுத பெற்றோர், ஆம்புலன்ஸ் மூலம் அனுமித்ராவை கொண்டு வந்து கடந்த 6-ந் தேதி இரவு 7.30 மணிக்கு தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை குழந்தைகள் நல பிரிவில் அனுமதித்தனர்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் மருததுரை, மருத்துவமனை நிலைய அலுவலர் செல்வம், காது, மூக்கு தொண்டை டாக்டர் ராஜ்கமல், மயக்கவியல் டாக்டர் மாலினி, குழந்தைகள் நல டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அனுமித்ராவின் சுவாசத்தையும், ரத்த ஓட்டத்தையும் முதலில் சீர் செய்தனர்.

பின்னர் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, நுரையீரலின் வலது பக்கத்தில் நிலக்கடலை 3 துண்டுகளாக சிக்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவக்குழுவினர், ‘ரிஜட்பிராங்கோஸ் கோபி’ என்ற ஸ்கோப்பி மூலம் 2 மணி நேரம் போராடி நிலக்கடலையை வெளியே எடுத்து குழந்தையின் உயிரை காத்தனர்.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் கண்காணிப்பில் அனுமித்ரா நலமுடன் உள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை காப்பாற்றிய மருத்துவக்குழுவினருக்கு குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்