சேலத்தில் முதல்-அமைச்சர் வீட்டு முன்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் - பணி நியமனம் வழங்க வலியுறுத்தல்
பணி நியமனம் வழங்க வலியுறுத்தி சேலத்தில் உள்ள முதல்-அமைச்சர் வீட்டு முன்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதற்காக அவர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் சேலத்தில் தங்கியிருப்பதை அறிந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் 700-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை 7 மணியளவில் முதல்-அமைச்சர் வீட்டு முன்பு கூடினர். பின்பு அவர்கள் பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல் -அமைச்சரின் உருவப்படம் பொறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி வரிசையாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து முதுநிலை ஆசிரியர்கள் கூறியதாவது:-
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1:2 என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அப்போது சில குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டுமே ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
தற்போது 1,500-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் எங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். மேலும் தனியார் பள்ளிகளில் தற்போது வேலை வழங்கவில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதித்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோன்று பகுதிநேர ஆசிரியர்கள் கூறும்போது, தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளாக 12 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறோம். மாதத்திற்கு 12 நாள் மட்டுமே பணி வழங்குகின்றனர். சம்பளம் மிகவும் குறைவாகவே வழங்கப்படுகிறது. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறினர்.
இந்த நிலையில் சென்னை செல்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து கார் மூலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு புறப்பட்டார். அவர் சென்றதை அறிந்ததும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் சிலர் திடீரென்று அந்த இடத்திலேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முதல்-அமைச்சர் வீட்டு முன்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் அங்கு நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.