கோவையில் நள்ளிரவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி சாவு

கோவையில் நள்ளிரவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதில் படுகாயம் அடைந்த அவருடைய தாயாருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Update: 2021-01-09 05:56 GMT
இடிந்து விழுந்த வீட்டை படத்தில் காணலாம்.
வீடு இடிந்து விழுந்தது
கோவை சித்தாபுதூர் ஹரிபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆக வில்லை. இவர் தனது தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ராஜசேகர், சரஸ்வதி ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

அப்போது நள்ளிரவில் அவரது வீட்டின் மண் சுவர் திடீரென்று இடிந்தது. மேலும் மேற்கூரையுடன் இடிந்து விழுந்தது.

இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜசேகர், சரஸ்வதி ஆகியோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இது குறித்த தகவலின் பேரில் போலீஸ் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

தொழிலாளி சாவு
அவர்கள், இடிபாடுகளில் சிக்கிய 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜசேகர் பரிதாபமாக இறந்தார்.

தலையில் பலத்த காயங்களுடன் சரஸ்வதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்