திருப்பூர் மாவட்டத்தில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை - இன்று நடக்கிறது

திருப்பூர் மாவட்டத்தில் 5 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.

Update: 2021-01-08 17:03 GMT
திருப்பூர், 

உலகம் முழுவதும் கொரோனா கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக பல நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டன. தற்போது இதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வர உள்ளது.

இதற்கிடையே இந்த மருந்தை முதற்கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்களுக்கு செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகைகளும் சென்னை உள்பட சில மாவட்டங்களில் நடைபெற்றுவிட்டன. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை திருப்பூர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் உடுமலை அரசு மருத்துவமனை, பொங்கலூர் ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பூர் டி.எஸ்.கே. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சரண் தனியார் மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒத்திகை நடக்கிறது. இதில் ஒரு மருத்துவமனைக்கு 25 பேர் வீதம் 125 பயனாளிகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

இதற்கிடையே இதற்கான பணிகள் தற்போது சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் டி.எஸ்.கே. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒத்திகைக்கான முன்னேற்பாடுகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார். இதில் மாநகர் நல அதிகாரி பிரதீப் கிருஷ்ணகுமார் மற்றும் டாக்டர் ஜெயப்பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுபோல் இன்று தடுப்பூசி போடப்படுகிறவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா? என கண்காணிப்பு அறையில் 30 நிமிடம் அவர்களை அமரவைத்து கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்ய இருக்கிறார்.

மேலும் செய்திகள்