கொடுவாயில், மளிகை கடையில் ரூ.53 ஆயிரம் திருட்டு - பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் கைவரிசை
பொங்கலூர் அருகே கொடுவாயில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.53 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். இதுபற்றி போலீஸ் தரப்பில்கூறப்படுவதாவது:-
பொங்கலூர்,
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கொடுவாய் வெள்ளியம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் வெங்கடாசலம் (வயது 70). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்து விட்டு அருகிலுள்ள வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ.53 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து வெங்கடாசலம் அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையை ஆய்வு செய்தனர். தொடர்ந்து திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அருகில் இருந்த கவிதா என்பவரது ஸ்வீட் கடையிலும் மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கு பணம் எதுவும் இல்லாததால் கடையில் இருந்த ஒரு கிலோ இனிப்புகளை மட்டும் எடுத்துக்கொண்டு மர்ம ஆசாமிகள் அங்கிருந்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து பொங்கலூர் பகுதியில் தொடர்ந்து திருட்டு நடைபெறுவது பொது மக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.