சிறுமி கண்ணில் குத்தி புகுந்த தூண்டில் முள் நுட்பமான அறுவை சிகிச்சை மூலம் மதுரை அரசு டாக்டர்கள் அகற்றினர்
சிறுமி கண்ணில் குத்தி புகுந்த தூண்டில் முள்ளை நுட்பமான அறுவை சிகிச்சை மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அகற்றினர்.
மதுரை,
சிவகங்கை மாவட்டம் கோமாலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகள் தீர்க்கதர்ஷினி (வயது 4). கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் முன்பு அவள் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமியின் இடது கண்ணில் மீன் பிடிக்கும் தூண்டில் முள் குத்தி புகுந்துகொண்டது.
இதனால் வலியால் சிறுமி துடித்தாள். அவளது கண் அருகே வீக்கமும், பார்வையில் பாதிப்பும் ஏற்பட்டது. உடனே சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவள், பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி கண் சிகிச்சை பிரிவுக்கு அழைத்து வரப்பட்டாள்.
அங்கு கண் சிகிச்சை நிபுணர்கள், சிறுமிக்கு பரிசோதனை செய்து பார்த்த போது சிறுமியின் இடது கண்ணில் தூண்டில் முள் கம்பி மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக குத்திக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மயக்கவியல் துறை பேராசிரியர் செல்வகுமார் மற்றும் கண் மருத்துவ துறை பேராசிரியர் விஜய சண்முகம் தலைமையில் சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டு, அந்த மருத்துவ குழுவினர் சிறுமியின் கண்ணில் சிக்கி இருந்த தூண்டில் முள்ளை மிகவும் நுட்பமான அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
தொடர்ந்து அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது சிறுமி தீர்க்கதர்ஷினி குணமடைந்தாள். அவளுக்கு பார்வையும் சரியாக இருக்கிறது. சிறுமியின் சிகிச்சைக்கு உதவிய டாக்டர்களுக்கு அவளுடைய பெற்றோர் நன்றி கூறினர். இந்த சேவையை ஆற்றிய மருத்துவ குழுவினரை மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி பாராட்டினார்.