கொரோனா தொற்று குறைந்து உள்ளதால் ‘எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளை தொடங்கலாம்’ - பள்ளி திறப்பு குறித்து பெற்றோர் கருத்து

கொரோனா தொற்று குறைந்து உள்ளதால் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 வகுப்புகளை தொடங்கலாம் என பள்ளி திறப்பு குறித்து பெற்றோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Update: 2021-01-08 13:37 GMT
காரைக்குடி,

கொரோனா தொற்று காரணமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.. தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. இதையடுத்து தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் முன்னோட்டமாக பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடத்த அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவிட்டது. ஏற்கனவே கடந்தாண்டு நவம்பர் மாதம் முதற்கட்டமாக பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் அப்போது மாணவர்களை உடனடியாக பள்ளிக்கு அனுப்ப முடியாது என்று தங்களது கருத்தை தெரிவித்தனர். இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளை திறப்பதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்புக்கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்று காரைக்குடி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களிடம் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்டனர். காரைக்குடி ராமநாதன் செட்டியார் அரசு பள்ளியிலும் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான பெற்றோர்கள் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அரசு பொதுத்தேர்வு எழுதும் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்காவது பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர். மேலும் கடந்த 10 மாதத்திற்கு மேலாக பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் மாணவர்களின் படிப்பு திறன் குறைந்து வருவதாக கூறினர். மேலும் மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுவதாக தங்களது கருத்துகளை தெரிவித்தனர். மற்றொரு தரப்பினர் இப்போதைய சூழ்நிலையில் மாணவர்களின் உடல்நலம் முக்கியமானது. ஆதலால் பள்ளி திறப்பு குறித்து நன்கு ஆலோசித்து அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று தங்களது கருத்தை தெரிவித்தனர். மாணவ-மாணவிகளின் பெற்றோர் தெரிவித்த கருத்துகளை பள்ளி தலைமை ஆசிரியர் சேகரித்து மாவட்ட கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க உள்ளனர். இறுதியில் பள்ளிகல்வித்துறை பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யும் என தலைமை ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்