கிருஷ்ணகிரியில் மாதிரி வாக்குப்பதிவு சரிபார்க்கும் பணி - கலெக்டர் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரியில் முதல்நிலை மாதிரி வாக்குப்பதிவு சரிபார்க்கும் பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-01-08 09:41 GMT
கிருஷ்ணகிரி,

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி இந்த தேர்தலை நேர்மையாக நடத்திட தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். இதில் ஒரு பகுதியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வாக்கு சரிபார்க்கும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி வேளாண் விற்பனை வணிக வளாகம் ஆகிய இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 4 ஆயிரத்து 7 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 2 ஆயிரத்து 854 கன்ட்ரோல் யூனிட், 3 ஆயிரத்து 100 வி.வி. பேட் எந்திரங்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 961 எந்திரங்கள் கடந்த மாதம் 2-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரையில் முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் நடந்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்று கிருஷ்ணகிரி வேளாண் விற்பனை வணிக வளாகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட் மற்றும் வி.வி. பேட் ஆகியவை மூலம் முதல்நிலை மாதிரி வாக்குப்பதிவு சரிபார்க்கும் பணிகள் நடந்தது. இதை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் காத்தவராயன், தி.மு.க. சார்பில் ரவி, காங்கிரஸ் கட்சி சார்பில் பன்னீர் செல்வம், தேசியவாத காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சந்திரமோகன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்