வியாபாரி வீட்டில் ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை கத்தியை காட்டி மிரட்டிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருக்கோவிலூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி வியாபாரி வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-01-08 05:14 GMT
திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரை அடுத்த அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகோபால் மகன் ஜோதிமணி(வயது 40). இவர் பழைய மோட்டார் சைக்கிள்களை வாங்கி அதனை மறு விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வருகிறார். தற்போது இவர் அரும்பாக்கத்தில் உள்ள புறவழிச்சாலையில் புதிதாக வீடு கட்டி அங்கு வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஜோதிமணி, தனது மனைவி சாந்தா மற்றும் 2 குழந்தைகளுடன் படுத்து தூங்கினார். வீட்டின் ஹாலில் நந்தகோபால் படுத்திருந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் ஜோதிமணிவீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. இந்த சத்தம் கேட்டு எழுந்த நந்தகோபால் கதவை திறக்க முயன்றார். அதற்குள் கதவை உடைத்துக்கொண்டு, முகமூடி அணிந்த மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் நந்தகோபாலை தாக்கினர். இவரது அலறல் சத்தம் கேட்டு ஜோதிமணி, சாந்தா மற்றும் குழந்தைகள் வெளியே வந்தனர்.

நகை-பணம் கொள்ளை

அதற்குள் மர்மநபர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் ஜோதிமணியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். பின்னர் பீரோவில் இருந்த 12 பவுன் நகை, சாந்தா கழுத்தில் கிடந்த 3 பவுன் நகை பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் இதுபற்றி ஜோதி மணி திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி, இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக், சம்பவ இடத்துக்கு வந்து ஜோதிமணியின் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் சாய்னா வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டை மோப்பம் பிடித்தபடி திருக்கோவிலூர்-கள்ளக்குறிச்சி சாலை வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்