கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுப்பு எடுத்து...
காலியாக உள்ள கண்காணிப்பு பொறியாளர் பதவியை துறையிலுள்ள செயற்பொறியாளரை கொண்டு நிரப்பாமல் டெபுடேசன் முறையில் வெளியிலிருந்து நிரப்பும் சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும், செயற்பொறியாளர் பதவிக்கான நியமன விதியை திருத்தம் செய்யும் முடிவினை திரும்பப்பெற வேண்டும், மத்திய அரசின் நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டிய பணிகளை பொதுப்பணித்துறை மூலமாகவே நடைபெற ஆவன செய்யவேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை புதுவை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதன்படி நேற்று அவர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்தனர்.
கண்டன கூட்டம்
மேலும் அவர்கள் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த வந்தனர். ஆனால் அதற்கு அனுமதி இல்லாததால் பொதுப்பணித்துறை அலுவலக கலந்தாய்வு அறையில் கண்டன கூட்டம் நடத்தினார்கள்.
கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன நிர்வாகிகள் பாலமோகனன், ராதாகிருஷ்ணன், பொறியாளர் சங்க நிர்வாகிகள் இஸ்மாயில், எழில்வண்ணன் உள்பட பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
காரைக்கால்
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொறுப்பாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜெயசிங், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சம்மேளன துணை தலைவர் தமிழ்வாணன், செயலாளர் ரஞ்சித், அலுவலக செயலாளர் புகழேந்தி, பொறியாளர்கள் பக்கிரிசாமி, அருளரசன், அருளானந்தம், பத்மநாபன், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.