முக்கிய முடிவுகள் எடுக்க ஜனதா தளம் (எஸ்) கட்சியில் ஒருங்கிணைப்பு குழு தொடக்கம்; குமாரசாமி தகவல்

முக்கிய முடிவுகளை எடுக்க ஜனதா தளம் (எஸ்) ஒருங்கிணைப்பு குழு தொடங்கப்படும் என்று குமாரசாமி கூறினார்.

Update: 2021-01-08 01:27 GMT
குமாரசாமி
ஒருங்கிணைப்பு குழு
ஜனதா தளம் (எஸ்) கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்த ஆலோசனைக்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சங்கராந்தி பண்டிகைக்கு பிறகு ஜனதா தளம் (எஸ்) கட்சியில் பெரிய அளவில் மாற்றங்களை செய்ய உள்ளோம். கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் இந்த மாற்றம் நடைபெற உள்ளது. முக்கிய முடிவுகளை எடுக்க ஜனதா தளம் (எஸ்) கட்சி ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்க உள்ளோம். அந்த குழு எடுக்கும் முடிவே இறுதியானது. அந்த குழுவுக்கு நியமிக்கப்படுபவர்கள் ஒரு முறை 
கூட்டத்திற்கு வராவிட்டால் வேறு நிர்வாகிகளுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும்.

பதவி வழங்க மாட்டோம்
ஒரு மண்டலத்திற்கு ஒரு குழு அமைப்போம். நிர்வாகிகள் நியமனத்தில் சாதிவாரியாக பிரதிநிதித்துவம் வழங்கப்படும். தலைவர்களின் பின்னால் சுற்றுபவர்களுக்கு பதவி வழங்க மாட்டோம். மக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பதவி வழங்குவோம். வருகிற 2023-ம் ஆண்டு கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) ஆட்சி அமையும். அதற்காக நாங்கள் இப்போது இருந்தே கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

எங்கள் கட்சியை விட்டு செல்பவர்களுக்கு நாங்கள் காரணம் அல்ல. சித்தராமையா விலகி சென்றதற்கு நாங்கள் காரணமா?. காங்கிரசார் வந்து தேவேகவுடாவை சம்மதிக்க வைத்து ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்தனர். மந்திரிசபை விஸ்தரிப்பை காங்கிரசாரின் அனுமதி பெற்றே மேற்கொள்ள வேண்டியதாக இருந்தது. எங்கள் கட்சிக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர்.

டெண்டரே விடவில்லை
பசவண்ணரின் அனுபவ மண்டபம் கட்ட எடியூரப்பா அடிக்கல் நாட்டியுள்ளார். அதற்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இன்னும் டெண்டரே விடவில்லை. நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை. பா.ஜனதாவுடன் ஜனதா தளம் (எஸ்) இணைக்கப்படுவதாக வெளியான தகவல் தவறானது.

அத்தகைய எந்த திட்டமும் எங்களிடம் இல்லை. கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் முன்வர வேண்டும். ஒவ்வொரு தாலுகாவிலும் புதிதாக 20 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்