எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில், 36 மணிநேரம் சிகிச்சை அளித்து 1½ வயது குழந்தையை காப்பாற்றிய டாக்டர்கள்

அதிகளவில் இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது குழந்தையை 36 மணிநேரம் தொடர் சிகிச்சை அளித்து டாக்டர்கள் காப்பாற்றினர்.

Update: 2021-01-07 23:19 GMT
எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி
1½ வயது குழந்தை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சிர்பதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுக்கு 1½ வயதில் பவ்யா என்ற பெண் குழந்தை உள்ளது. 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனிமொழி, தனது குழந்தையை வீட்டில் விளையாட வைத்துவிட்டு, சமையல் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது குழந்தை பவ்யா, வீட்டில் இருந்த இரும்பு சத்து மாத்திரையை அதிகளவில் சாப்பிட்டுள்ளது. இதனால் குழந்தை சிறிது நேரத்தில் மயங்கியது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கனிமொழி மற்றும் குமரேசன் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.

36 மணிநேரம் சிகிச்சை
பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில், தீவிர சிகிச்சை பிரிவு துறை பேராசிரியர் டாக்டர் பூவழகி தலைமையில் டாக்டர் குமாரவேல் உள்ளிட்ட டாக்டர்கள் குழு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். 36 மணி நேரம் தீவிர கண்காணிப்பு பிரிவில் தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

பாராட்டு
36 மணிநேர தொடர் சிகிச்சைக்கு பிறகு குழந்தை பவ்யா தற்போது, உடல் நிலை முன்னேற்றம் அடைந்து மிகவும் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படும் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

சிறப்பாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றிய டாக்டர்கள் குழுவுக்கு ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் எழிலரசி, மக்கள் தொடர்பு அதிகாரி கங்காதரன் உள்ளிட்ட டாக்டர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

இது குறித்து டாக்டர் எழிலரசி கூறியதாவது:-
குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் பல்வேறு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளது. இதனால் தான் பல ஆஸ்பத்திரிகளும் கைவிரித்த நிலையில், எங்களது டாக்டர்கள் சிறப்பாக செயல்பட்டு, குழந்தை பவ்யாவின் உயிரை காப்பாற்ற முடிந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்