10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா? பெற்றோர்களிடம் கருத்து கேட்பு

பொங்கலுக்கு பிறகு 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து சேலத்தில் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

Update: 2021-01-07 14:34 GMT
சேலம்,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. நோய் தாக்கம் குறைந்து வந்தாலும் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு இது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில், கலந்து கொண்ட பெற்றோர்களில் பெரும்பாலானோர் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என கருத்து தெரிவித்ததையடுத்து பள்ளிகள் திறக்கும் முடிவு தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்தநிலையில், நோய் பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் 80 சதவீதம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்.

இதனை கருத்தில் கொண்டு பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பள்ளிகளில் பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் 292 அரசு பள்ளிகள் உள்பட அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் நேற்று கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

அதேபோல, இன்றும் (வியாழக்கிழமை) பள்ளிகளில் பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டங்களில் பெற்றோர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து இன்று மாலைக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்