சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கராஜ் (வயது 34), மூட்டை தூக்கும் தொழிலாளி. இவர் நேற்று தனது மனைவி மஞ்சு மற்றும் 2 குழந்தைகளுடன் சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர்கள் திடீரென தாங்கள் பாட்டிலில் மறைத்து வைத்து கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மாணிக்கராஜ் போலீசாரிடம் கூறும் போது, மூட்டை தூக்கும் தொழிலாளியான என் மீது பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக போலீசார் என் வீட்டுக்கு அடிக்கடி வந்து விசாரணை நடத்துகின்றனர். மேலும் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுக்குமாறு என்னை தொந்தரவு செய்கின்றனர். இதனால் சரியாக வேலைக்கு செல்லாததால் குடும்பத்தை காப்பாற்ற முடியவில்லை. ஆகையால் மனவேதனை அடைந்த நான் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்ததாக, தெரிவித்தார்.
இதையடுத்து அவரிடம் அன்னதானப்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.