வீடுகள் மீது கல் விழுவதை தடுக்க கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
வீடுகள் மீது கல் விழுவதை தடுக்க கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூளகிரி,
சூளகிரி அருகே பஸ்தலஅள்ளி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இங்கு பாறைகளுக்கு தினமும் வெடி வைப்பதால், அருகில் உள்ள வீடுகளின் மீது கற்கள் விழுவதாகவும், இதனால் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், நேற்று முன்தினம் குவாரி முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து, பஸ்தலபள்ளி ஊராட்சி தலைவர் கவிதா ராஜப்பா மற்றும் கிராம மக்கள் நேற்று சூளகிரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் அதிகாரிகளும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வீடுகள் மீது கல் விழுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து கல்குவாரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.