வேலூரில், உள்ளாட்சி நிதித்தணிக்கை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல்
வேலூர் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்,
வேலூர் அண்ணாசாலை ஏலகிரி வளாகத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு பரந்தாமன் (வயது 52) என்பவர் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இத்துறையினர் வேலூரில் உள்ள பேரூராட்சிகள் உள்பட பல்வேறு துறைகளில் ஆண்டுதோறும் நிதி தணிக்கை செய்யும் பணியில் ஈடுபடுவார்கள்.
இந்த நிலையில் பரந்தாமன் வேலூர் மாவட்டத்திலுள்ள பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் புத்தாண்டை முன்னிட்டு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெறுவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா, இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் நேற்று மாலை 5 மணி அளவில் உதவி இயக்குனர் அலுவலகத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் மற்றும் பொன்னாடை, புடவைகள், டைரி உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையின் தொடர்ச்சியாக அவர் பயன்படுத்திய காரையும் சோதனை செய்தனர்.
இதற்கிடையே அலுவலகத்தில் வெளி நபர்கள் யாரும் உள்ளே வராத வகையில் போலீசார் கதவை பூட்டினர். பரந்தாமனிடமும், அலுவலக ஊழியர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த சோதனை காரணமாக அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.