கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதியில் பலத்த மழை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2021-01-07 05:16 GMT
கள்ளக்குறிச்சி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததாக கூறப்பட்டாலும் கிழக்கில் இருந்து தொடர்ந்து காற்று வீசிவருவதால் வருகிற 12-ந் தேதி வரை ஆங்காங்கே மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கடலோர பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கடந்த நில நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது.

கள்ளக்குறிச்சியில்

இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் நேற்று அதிகாலை முதல் காலை 10 மணி வரை லேசான மழை பெய்தது. இதன் பின்னர் இடி மின்னலுடன் மழையின் வேகம் அதிகரித்தது. சுமார் 4 மணி நேரம் பலத்த மழையாக கொட்டியது. அதன் பிறகு மழை தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழையால் துருகம் சாலை, சேலம் மெயின் ரோடு, காந்தி ரோடுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் மழைவெள்ளத்தில் தத்தளித்தபடியே சென்றதை காண முடிந்தது.

வியாபாரம் பாதிப்பு

மேலும் சிலர் வாகனங்களை வேகமாக ஓட்டி சென்று சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் மற்றும் இருசக்கரவாகன ஓட்டிகள் மீது மழைநீரை வாரி இறைத்தபடி சென்றனர். இடைவிடாமல் பெய்த மழையால் வணிக நிறுவனங்கள் மற்றும் சாலையோர சிறு வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. அதேபோல் சங்கராபுரத்தில் நேற்று அதிகாலை 5 மணி முதல் மாலை வரை மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இது தவிர கச்சிராயப்பாளையம், சின்னசேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

மேலும் செய்திகள்