உடையார்பாளையத்தில் தொடர் மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

உடையார்பாளையத்தில் தொடர் மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வடிகால் வசதி ஏற்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-01-06 22:47 GMT
உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பலத்த மழை பெய்ததால் உடையார்பாளையம் பஸ் நிலையம், கடைவீதி, ராஜவீதி, வெள்ளாழ தெரு, தெற்கு தெரு, வடக்குத்தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து, வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கைக்களநாட்டார் தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமமடைந்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகவே உடையார்பாளையம் பகுதியில் வடிகால் வசதி இல்லை. இதனால் மழை காலங்களில் வீடுகளில் வெள்ளநீர் புகுந்து மிகவும் சிரமப்படுகிறோம். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் வடிகால் வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை.

கோரிக்கை

தற்போது தேங்கி இருக்கும் நீரில் விஷ ஜந்துகள் வருவதோடு, இரவு நேரங்களில் தூங்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு உடையார்பாளையம் பேரூராட்சியில் வடிகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்