அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் பதாகைகளை ஏந்தி போராட்டம்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி யானைப்பள்ளம் கிராம மக்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-06 16:02 GMT
கூடலூர்,

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் சட்டப்பிரிவு -17ன் கீழ் கொண்டுவரப்பட்ட அரசு நிலங்கள் உள்ளன. இதில் அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பேரூராட்சிக்கு உட்பட்ட சூண்டி அருகே யானைபள்ளம் கிராமத்தில் 200 குடும்பங்கள் உள்ளன. இங்கு 3 கி.மீ. தூரம் கொண்ட சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதேபோல் தெருவிளக்கு, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் சூண்டியில் மினி கிளினிக் திறப்பு விழாவுக்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் நேற்று வந்தனர். அப்போது சூண்டியில் இருந்து யானைபள்ளம் செல்லும் சந்திப்பில் கிராம மக்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைக்கண்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத், அ.தி.மு.க. வர்த்தக அணி மாநில தலைவர் சஜீவன் உள்பட கட்சி பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது முதற்கட்டமாக குடிநீர், தெருவிளக்கு வசதி செய்து தருவதாகவும், பின்னர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு பிறகு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்