பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: கேரளாவில் இருந்து பொருட்கள் கொண்டு வரக் கூடாது - தேனி கலெக்டர் உத்தரவு

பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கேரளாவில் இருந்து தேனிக்கு பொருட்கள் கொண்டு வரக்கூடாது என்று தேனி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-01-06 15:45 GMT
தேனி,

உலகில் பல நாடுகளில் பறவை காய்ச்சல் பரவி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் சில மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்திலும் சமீபத்தில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் இந்த நோய் பாதிப்பு இன்னும் கண்டறிய படவில்லை என்ற போதிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பாதைகளான குமுளி மலைப்பாதை, போடிமெட்டு மலைப்பாதை, கம்பம்மெட்டு மலைப்பாதை ஆகிய வழித்தடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அறிவுரைகளை அரசு துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.

கூட்டத்தை தொடர்ந்து கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-

கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வரும் வழித்தடங்களில் யாரும் காய்ச்சல் அறிகுறிகளுடன் வருகிறார்களா என்பதை கண்காணிக்க சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் இருந்து பொருட்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரக்கூடாது என்றும், தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லும் பொருட்களையும் மீண்டும் தமிழ்நாட்டுக்கு திருப்பிக் கொண்டு வரக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவையான மருந்துகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தேவையான கருவிகளையும் தயார் நிலையில் வைக்க சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பறவைகளின் மூலம் இந்த வைரஸ் பரவக் கூடும் என்பதால் கோழி வளர்ப்பவர்களுக்கு இதுகுறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கோழி பண்ணைக்குள் இதர கோழிகள் அல்லது பறவைகள் நுழைவதை தடுக்க வேண்டும். கொக்கு, நாரை போன்ற நீர்ப்பறவைகள் நுழைந்து விடாமல் தடுக்கும் வகையில் பண்ணை வளாகத்துக்குள் நீர்நிலைகள் எதுவும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக இந்த வகை வைரஸ் கிருமி மனிதர்களை தாக்குவதில்லை. இருப்பினும் சில நேரங்களில் நோயுற்ற பறவைகளை கையாளும்போது மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பொது சுகாதார நிலையங்களை மேம்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்