மானாமதுரை அருகே, தொடர் மழையால் 400 ஏக்கர் நெற்பயிர் சேதம் - விவசாயிகள் கவலை

மானாமதுரை அருகே தொடர் மழையால் 400 ஏக்கர் நெற்பயிர் சேதம் அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2021-01-06 14:09 GMT
மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இலந்தைகுளம், உடப்பன்குளம், நவத்தாவு, வெட்டுகாண்மாய், வீரபனிகேனந்தல் தீத்தான்குளம், ஆலங்குளம், குமிழன் தாவு, காட்டு உடைகுளம், சன்னதிபுதுக்குளம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமாேனார் விவசாயம் செய்து வருகின்றனர். இது வானம் பார்த்த பூமி என்பதால் மழை பெய்தால் மட்டும் இங்கு விவசாயம் நடைபெறும். கடந்த செப்டம்பர், அக்டோபரில் தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்தது. இதனால் அங்குள்ள குளம், குட்டை, கண்மாய்களில் நீர் நிரம்பியது. இதை தொடர்ந்து விவசாயிகள் நெல் பயிரிட்டனர். இப்பகுதியில் 400 ஏக்கருக்கும் அதிகமாக நெல் பயிரிடப்பட்டது. தற்போது நெற்கதிர் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வயலில் மழைநீர் தேங்கி நின்றது. பெரும்பாலான நெற்கதிர்கள் சாய்ந்தன. இதை பார்த்த விவசாயிகள் மழையால் நெற்பயிர்கள் இப்படி ஆகி விட்டதே என கண்ணீர் வடித்து உள்ளனர். தொடர் மழையால் சேதமான நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்ைக எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறும் போது, வீட்டில் மனைவி, மகள் நகைகளை வங்கியில் அடகு வைத்து நெல் பயிரிட்டேன். ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் செலவாகி விட்டது. இப்போது அறுவடை நேரத்தில் பெய்த மழையால் வயலில் மழைநீர் தேங்கி கடும் சேதத்ைத விளைவித்து விட்டது. பெரும்பாலான நெற்பயிர்கள் சாய்ந்து விட்டன. சேறும், சகதியுமாக வயல் காணப்படுவதால் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியவில்லை. எப்படி கடனை அடைக்க போகிறேன் என்று தெரியவில்லை என கண்கலங்கினார்.

இதற்கிடையே மழையால் சேதம் ஆன நெற்பயிர்களை கே.கே.பள்ளம் கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் பாண்டியமாள் சுமதி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதே போல காரைக்குடி அருகே உள்ள தி.சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியான திருவேலங்குடி, மற்றும் மாலையிட்டான்பட்டி பகுதியில் தொடர் மழையால் 200 ஏக்கர் நெல் பயிர் சேதம் அடைந்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்