அரிசி ஆலை கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் துர்நாற்றம்: பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
காரைக்குடி அருகே அரிசி ஆலை கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் துர்நாற்றம் வீசுவதாக கூறி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது ஆலைக்குள் தேக்கி வைத்து சுத்திகரிக்க வேண்டும். ஆனால் ஒரு சில ஆலைகளில் இவ்வாறு செய்யாமல் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் செல்லும்படி விட்டு விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி பெரும் சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
புதுவயல் சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்றதால் கடும் துர்நாற்றம் வீசியது. அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு கொசு தொல்லை மற்றும் தொற்று நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சகுபர்சாதிக் தலைமையில் புதுவயல் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த பகுதியில் புகுந்த இந்த கழிவுநீரால் வீடுகளில் உள்ள போர்வெல் தண்ணீரில் கழிவுநீர் இறங்கி சுகாதாரமற்ற தண்ணீர் வருவதாகவும், இந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி கொசு தொல்லை அதிகரித்து தோல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் கூறினர். இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுவும் கொடுத்தனர். தவறும் பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் தெரிவித்தனர்.