கிருஷ்ணகிரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்த ஆய்வு கூட்டம் - பார்வையாளர் வள்ளலார் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வள்ளலார் பங்கேற்று பேசினார்.

Update: 2021-01-06 11:55 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார்.

இதில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் வள்ளலார் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1,863 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 20-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. மேலும், பள்ளி மாணவர்களிடையே வாக்களிக்கும் முக்கியத்துவம் குறித்தும், சுதந்திரமாக வாக்களிக்க இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எந்த வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபாடின்றி இருந்திடல் வேண்டும் என்பதற்காக மீண்டும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து சான்று அளிக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் உள்ளதா என்று தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்திட வேண்டும்.

மேலும், சிறப்பு முகாம் நடைபெற்ற நாட்களில் மனுக்கள் பெறப்பட்டது. தேர்தல் ஆணைய இணையதளம் https://www.nvsp.in/ மற்றும் www.elections.tn.gov.in மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், தாசில்தார் (தேர்தல்) பாலசுந்தரம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்