வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரசாரம் - தொழில் அதிபர்கள், கட்சி தொண்டர்களை சந்திக்கிறார்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திறந்தவேனில் இன்று (புதன்கிழமை) தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

Update: 2021-01-06 11:35 GMT
வேலூர்,

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காகஅ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. பல்வேறு கட்சி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பிரசாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், திருவண்ணாமலையில் 3 கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் 4 -வது கட்டமாக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) திறந்த வேனில் பிரசாரமும், தொழில்அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து கலந்துரையாடவும் உள்ளார்.

இதுதொடர்பாக அந்த கட்சியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ‘சீரமைப்போம் தமிழகத்தை' என்ற குறிக்கோளுடன் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அதன்படி இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் காலை 10 மணிக்கும், குடியாத்தம் பழைய பஸ்நிலையம் அருகே காலை 11 மணிக்கும், காட்பாடி சித்தூர் பஸ்நிலையத்தில் நண்பகல் 12.30 மணிக்கும், விருதம்பட்டில் மதியம் 1 மணிக்கும் திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார்.

அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு வேலூர் அண்ணாசாலையில் உள்ள கண்ணா மகாலில் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்களிடம் கலந்துரையாடுகிறார். பின்னர் 5 மணிக்கு வேலூர் டோல்கேட் அருகேயுள்ள ஆர்.என்.பங்ஷன் ஹாலில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து பேசுகிறார். அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஆரணியில் தேர்தல் பிரசாரம் மற்றும் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், கட்சி தொண்டர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு ஆற்காடு, 9.30 மணியளவில் வாலாஜாவில் திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார். அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்