வேலூரில் நடந்த சிறப்பு முகாமில் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் 9 மாதங்களுக்கு பின்னர் நடைபெற்ற சிறப்பு முகாமில் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமையன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 9 மாதங்கள் சிறப்பு முகாம் நடைபெறவில்லை. இந்த நிலையில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு தலைமை தாங்கினார். இயன்முறை சிகிச்சையாளர் பார்த்தசாரதி, முடநீக்கியல் வல்லுனர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களை கண், காது, எலும்பு, மனநலம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ துறைகளை சேர்ந்த டாக்டர்கள் முத்து, குமரேசன், மீனா, அரிபிரசாத், சிவாஜிராஜ், சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர்.
இதில் தகுதியுடைய 95 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரேநாளில் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டன. மேலும் விண்ணப்பித்த சிலருக்கு ஊனத்தின் தன்மை குறித்து கண்டறிவதில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மூலம் ஊனத்தின் தன்மை கண்டறியப்படும். 40 சதவீதத்துக்கும் மேல் காணப்பட்டால் அவர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் சிறப்பு முகாமில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
9 மாதங்களுக்கு பின்னர் சிறப்பு முகாம் நடைபெற்றால் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகாம் நடைபெற்ற அரங்கில் மாற்றுத்திறனாளிகள் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர். அதனால் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் அரங்கின் வெளியே நீண்ட வரிசையில் காத்து நின்றனர். பலர் வரிசையில் நிற்க முடியாமல் அவதி அடைந்தனர். அவர்களை அமர வைக்க ஏற்பாடு செய்யப்படவில்லை. வழக்கமாக சிறப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். ஆனால் தற்போது சரியான திட்டமிடுதல் இல்லாததால் 95 பேருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டது என்று மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.