விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
விளாத்திகுளம்,
வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் அருகே உள்ள சிங்கிலிபட்டி - கல்குமி கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு தலைவர் முருகபூபதி தலைமை தாங்கினார். ஆற்றங்கரை (கல்குமி) ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன், என்.வேடபட்டி (சிங்கிலிபட்டி) ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றது. இதில் பூஞ்சிட்டு, சின்ன மாடு, நடுமாடு ஆகிய 3 பிரிவுகளில் சிங்கிலிபட்டி- விளாத்திகுளம் சாலையில் மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இந்த பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
பரிசு
5 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியை சிங்கிலிபட்டி தர்மகர்த்தா முத்துக்கண்ணன், கல்குமி தர்மகர்த்தா சேதுராஜ், கல்குமி இளைஞரணி தலைவர் பாலமுருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் முதல் பரிசு ரூ. 7 ஆயிரத்தை சிங்கிலிபட்டியை சேர்ந்த விக்கிரபாண்டி அய்யனார் மாட்டுவண்டி பெற்றது.
6 கி.மீ. தூர சின்னமாட்டு வண்டி போட்டியை விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தொடங்கி வைத்தார். இதில் முதல் பரிசு ரூ.9 ஆயிரத்தை துவரந்தையை சேர்ந்த பொய்சொல்லான் மாட்டு வண்டி தட்டிச் சென்றது.
8 கி.மீ. தூர நடுமாட்டு வண்டி போட்டியை எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தொடங்கி வைத்தார். போட்டியில் முதல் பரிசு ரூ 12 ஆயிரத்தை சிங்கிலிபட்டியை சேர்ந்த முருகபாண்டி மாட்டு வண்டி பிடித்தது.