கடலாடி அருகே, தேவர் சிலை திறப்புக்கு அனுமதி மறுப்பு; அதிகாரிகளை கிராமமக்கள் முற்றுகை - பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கடலாடி அருகே தேவர் சிலை திறப்புக்கு அனுமதி மறுக்கப் பட்டதால் அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாயல்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஒருவானேந்தல் கிராமத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை கிராமத்தினர் சார்பில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 3 நாட்களுக்குமுன் உரிய அனுமதி பெறமால் திறக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கடலாடி தாசில்தார் சீனிவாசன், முதுகுளத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவி ஆகியோர் தலைமையிலான போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருவானேந்தல் கிராமத்திற்கு சென்று அனுமதி மறுத்து புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையை துணியால் மூட முயற்சி செய்தனர்.
இதற்கு கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகையிட்டு துணியால் தேவர் சிலை மூட விடாமல் தடுத்தனர். அப்போது பெண்கள் தங்களது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை தடுத்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொதிகுளம், ஆப்பனூர், ஏனாதி, கிடாத்திருக்கை, புனவாசல், தேவர் குறிச்சி, தூவல் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அக்கிராமத்தில் திரண்டு வந்தனர்.அவர்கள் அனைவரும் தேவர்சிலை முன்பு பாதுகாப்புக்காக அமர்ந்தனர். நேற்று இரவு அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு கிராமமக்கள் அமர்ந்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.