வாக்குப்பதிவு எந்திரங்களை தி.மு.க. கண்காணிப்பு குழு தொடர் ஆய்வு செய்யும் - சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தகவல்

மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களை தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு செய்யும் போது தி.மு.க. கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள் என தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2021-01-05 14:53 GMT
விருதுநகர்,

விருதுநகரில் உள்ள வேளாண் விற்பனை குழு வளாகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அறையில் உள்ள இந்த எந்திரங்களை தொழில்நுட்ப வல்லுனர்கள் வருகிற 8-ந் தேதி வரை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கலெக்டர் கண்ணன் நேற்று ஆய்வு பணிகளை கண்காணித்தார். அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், மேற்கு மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு பொருளாளர் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு பின் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறியதாவது:- விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த எந்திரங்களின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு உள்ளன என்பதை தி.மு.க. கண்காணிப்பு குழு தொடர்ந்து ஆய்வு செய்ய உள்ளோம்.

இதற்காக 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா இரண்டு வக்கீல்கள் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு குழுவினர் ஆய்வு முடியும் வரை கண்காணிப்பில் ஈடுபட்டு வருவார்கள் ஏதேனும் பிரச்சினை இருந்தால் கலெக்டரிடம் முறையிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்