மாவட்டம் முழுவதும் 382 போலீசார் கிராம விழிப்புணர்வு அலுவலர்களாக நியமனம் - போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கையேடுகளை வழங்கினார்
நாமக்கல் மாவட்டத்தில் 382 போலீசார் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு கையேடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் வழங்கினார்.
நாமக்கல்,
தமிழக சிறப்பு காவல்துறை இயக்குனர் அறிவுரையின்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 368 தாய் கிராமங்கள் மற்றும் 1,583 குக்கிராமங்களில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் குற்றங்கள் சம்பந்தமாக கண்காணிக்க ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்தனியாக மொத்தம் 382 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நாமக்கல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீசாருக்கு கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்களாக பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல்லில் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கலந்து கொண்டு கையேடுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ள நீங்கள் தங்களது கிராமத்திற்கு சம்பந்தபட்ட அனைத்துத்துறை புள்ளி விவரங்கள், சுற்றுலா தலங்கள், மக்கள் தொகை, மருத்துவமனைகளின் விவரம், முக்கிய நபர்கள், பிரச்சினைக்குரிய பகுதிகள், வங்கிகளின் விவரம், கண்காணிப்பு கேமரா உள்ள விவரம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் உள்பட 108 வகையான விவரங்களை சேகரித்து தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள கோப்பில் பதிவு செய்ய வேண்டும்.
ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளோ அல்லது குற்ற சம்பவங்களோ நிகழ்ந்தால் உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு நேரடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பரமத்திவேலூர் உட்கோட்டங்களுக்கும் சென்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனைத்து கிராம கண்காணிப்பு காவலர்களையும் நேரில் சந்தித்து, அவர்களுக்கான கையேடுகளை அளித்து, வரும் காலங்களில் அனைத்து முக்கிய நிகழ்வுகள், சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் தகவல் கொடுப்பவர்கள் சம்பந்தமான விவரங்கள் உள்பட கோப்பில் உள்ளவாறு அனைத்து விவரங்களையும் ஒரு வார காலத்திற்குள் பூர்த்தி செய்து தங்களது பராமரிப்பில் வைத்து கொள்ள வேண்டும் என்றார்.
தகவல் தெரிவிக்க வேண்டும்
மேலும் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தாய் கிராமம் மற்றும் குக்கிராமங்களில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டுக்கும் நேரடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.