பணகுடி அருகே மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை; நெல்லை கோர்ட்டு தீர்ப்பு

பணகுடி அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகிளா கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-01-05 02:10 GMT
மனைவி கொலை
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தளவாய்புரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ராமையா மகன் கர்ணன் (வயது 38). இவர் அந்த பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ரக்சியா ராஜபாய் (25). இவர்கள் 2 பேரும் கடந்த 2009-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

காதல் திருமணம் செய்து கொண்டதால் நகை ஏதும் அவர் கொண்டு வரவில்லை. அதனால் கர்ணன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வரதட்சணை கேட்டு மனைவியை சித்திரவதை செய்து வந்தார். 1-1-2013 அன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கர்ணன் தனது மனைவியை அடித்து கொலை செய்தார். இதுகுறித்து ரக்சியா ராஜபாய் தாயார் பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்ணனை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை
இந்த வழக்கு விசாரணை நெல்லை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக கோர்ட்டில் கர்ணன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி இந்திராணி விசாரித்து, 

கர்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கர்ணனை போலீசார் கைது செய்து மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சிவலிங்கமுத்து ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது மற்றும் போலீசாரை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பாராட்டினார்.

மேலும் செய்திகள்