ரூ.2,500 ரொக்கம், பொங்கல் தொகுப்பு: 8 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறுவார்கள் அமைச்சர் தகவல்

ரூ.2,500 ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பை பெறுவதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் 8 லட்சத்து 3 ஆயிரம் ரேஷன் கார்டுதார்கள் பயன்பெறுவார்கள் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

Update: 2021-01-05 02:10 GMT
திருச்சி,

திருச்சி பேலஸ் தியேட்டர் எதிரே உள்ள பாலக்கரை சிந்தாமணி குடோன் ரேஷன் கடை, பெட்டவாய்த்தலை கூட்டுறவு சங்க ரேஷன்கடை ஆகியவற்றில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தனர். இதற்கு, மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வரவேற்று பேசினார். பயனாளிகளுக்கு ரூ.2,500 ெராக்கத்துடன் பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, திராட்சை 20 கிராம், முந்திரி 20 கிராம், ஏலக்காய் 5 கிராம், வேட்டி-சேலை மற்றும் முழுக்கரும்பு ஆகியவை வழங்கபட்டது.

8 லட்சத்து 3 ஆயிரம் பேர் பயன்

திருச்சி பாலக்கரை நிகழ்ச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது:-

கூட்டுறவுத்துறையின் பொது வினியோக திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் செயல்படும் 1,206 ரேஷன் கடைகளிலும், நுகர்பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்படும் 19 ரேஷன் கடைகளிலும் ஆக மொத்தம் 1,225 ரேஷன் கடைகள் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் ரூ.2,500 ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பினை 8 லட்சத்து 3 ஆயிரத்து 355 ரேஷன்கார்டுதார்கள் பெற்று பயன் அடைவார்கள்.

மேலும் ஏற்கனவே சர்க்கரை ரேஷன் கார்டு வைத்திருந்து அதனை அரிசி கார்டாக மாற்றம் செய்ய விண்ணப்பத்திருந்த அனைவரும் பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், மாவட்ட வருவாய் அதிகாரி பழனிக்குமார், கூட்டுறவு ஒன்றிய தலைவர் நடேசன், சிந்தாமணி கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் சகாதேவ்பாண்டியன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எம்.எல்.ஏ.க்கள்

முசிறி, பாப்பாப்பட்டி, அஞ்சலம், தா.பேட்டை, மேட்டுப்பாளையம், பிள்ளாபாளையம், தும்பலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பயனாளிகளுக்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் தா.பேட்டை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் (மேற்கு) ஆர்.ஜெயம் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள், செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ெபாங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திருப்பைஞ்சீலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் டி.எம். சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில், பரமேஸ்வரி எம்.எல்.ஏ. பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். திருப்பைஞ்சீலி ஊராட்சி மன்ற தலைவர் பி.தியாகராஜன், மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்ஆதாளி, அண்ணா தொழிற்சங்க முன்னாள் மாநில இணைச்செயலாளர் எம்.மாரியப்பன், ஊராட்சி செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கல்லக்குடி

புள்ளம்பாடி ஒன்றியம் திண்ணகுளம், விரகாலூர் கிராமங்களில் உள்ள ரேஷன்கடைகளில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனருமான டி.என். சிவக்குமார் தலைமையிலும், அலுந்தலைப்பூரில் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜாராம் தலைமையிலும், கல்லக்குடியில் கூட்டுறவு சங்க தலைவர் பிச்சை பிள்ளை தலைமையிலும், புள்ளம்பாடியில் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜேக்கப்அருள்ராஜ் தலைமையிலும், கோண்டாகுறிச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர் சதானந்தம் தலைமையிலும், பெருவளப்பூர் கூட்டுறவு சங்க தலைவர் செல்வம் தலைமையிலும், வந்தலை கூடலூரில் கூட்டுறவு சங்கத் தலைவர் இளையகுமார் தலைமையிலும், பு.சங்கேந்தியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் ரெங்கராஜன் தலைமையிலும், வெங்கடாசலபுரம் கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் ஜெனிபர் ஜெனிவா ஹென்றிபிரபா தலைமையிலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

லால்குடி

லால்குடி சிவஞானம் கூட்டுறவு சங்கத்தில் கூட்டுறவு துறை சார்பில், சங்கத்தின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். இதில், லால்குடி அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் அசோகன், நகர செயலாளர் சந்திரசேகர், கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் பனையடியான் மற்றும் கூட்டுறவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

காட்டுப்புத்தூர்

தொட்டியம் வட்டம், ஏழுர்பட்டி ெதாடக்க வேளாண்மை கூட்டுறவு ரேஷன் கடைகளில், ஏழுர்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான தங்க.தமிழ்ச்செல்வன் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். காட்டுப்புத்தூரில் உள்ள ரேஷன் கடைகளில் காட்டுப்புத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவரும், ஸ்ரீராமசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவருமான பி.நவஜோதி பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர்.

மேலும் செய்திகள்