நெல்லை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்; பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்
நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் நேற்று தொடங்கியது. பொது மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையைெயாட்டி அரிசி வாங்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.2,500 வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதையடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று எந்தெந்த தேதியில் பொது மக்கள் ரேஷன் கடைகளுக்கு வந்து பொங்கல் பரிசு பொருட்களை பெற்றுச் செல்ல வேண்டும் என்பதற்கான டோக்கன்களை வழங்கினர்.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 796 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 4,57,576 அரிசி பெறும் ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுதாரர்களுக்கு ரூ.122 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
வினியோகம் தொடங்கியது
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதைெயாட்டி நெல்லை மாநகரில் காலை 8 மணி அளவில் ரேஷன் கடைகளை ஊழியர்கள் திறந்து பணியை தொடங்கினர். பொதுமக்களும் டோக்கன் மற்றும் ரேஷன் ஸ்மார்ட் கார்டு கொண்டு வந்து வரிசையாக நின்றிருந்தனர்.
அவர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் சிறப்பு பொருட்களான 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சீனி, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி பருப்பு, 5 கிராம் ஏலக்காய் மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது.
நெல்லையில் ரேஷன் கடைகளில் நேற்று பொது மக்கள் வரிசையாக நின்று பொங்கல் பொருட்களை வாங்கிச்சென்றனர். குறிப்பிட்ட தேதியில் வருமாறு டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் ஏதேனும் பிரச்சினை ஏற்படாமல் இருக்க ரேஷன் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்கள் பொது மக்களை சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து, முக கவசம் அணிந்த நிலையில் வரிசையாக அனுப்பி வைத்தனர். கொரோனா பரவலைெயாட்டி ரேஷன் கடைகள் முன்பு சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றும்
வகையில் வட்டம் போடப்பட்டிருந்தது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், ‘‘கொரோனா காலத்தில் பொங்கல் பொருட்களுடன் ரூ.2,500 வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு முழு கரும்பு வழங்கி உள்ளது சிறப்பு வாய்ந்தது ஆகும்’’ என்றனர்.
பொங்கல் பொருட்கள் வழங்கும் பணியை அந்தந்த பகுதியில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தனர்.