புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு: 18ந்தேதி முதல் முழு நேரமும் செயல்படும்
புதுச்சேரியில் 9 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 18-ந் தேதி முதல் முழுநேரமும் செயல்பட உள்ளது.
புதுச்சேரி,
உலகையே மிரட்டிய கொரோனா இந்தியாவிலும் புகுந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு (2020) மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்புகள் குறையத்தொடங்கியதும் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை மெதுவாக திரும்பியது.
இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த (டிசம்பர்) மாதம் 17-ந் தேதி முதல் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன.
பள்ளிகள் மீண்டும் வழக்கம்போல் எப்போது செயல்படும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன.
பள்ளிக்கு காலை 9 மணி முதல் மாணவர்கள் வர தொடங்கினார்கள். விட்டு விட்டு பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் குடையுடனும், மழை கோட்டு அணிந்தும் பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் வந்தனர். ஏராளமான பெற்றோர் இருசக்கர வாகனங்களில் தங்களின் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து வந்தனர்.
லப்போர்த் வீதியில் உள்ள எக்கோல் ஆங்கில அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை வரவேற்கும் விதமாக வாழைமரம், பலூன் ஆகியவை தோரணங்களாக கட்டப்பட்டு இருந்தன. மாணவர்களை ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். பள்ளிக்கூட வளாகங்களில் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்ததுடன் கிருமி நாசினி வழங்கப்பட்டது. வகுப்பறைகளில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். ஆசிரியர்கள் மாணவர்களை கட்டாயம் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் தொடர்ந்து அறிவுறுத்தினர். பள்ளிகள் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட்டது.
புதுச்சேரியில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பள்ளிகளில் 50 முதல் 80 சதவீதம் வரை மாணவர்கள் வருகை தந்தனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதால் ஒருசில பெற்றோர் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டினார்கள். பள்ளி சீருடை, கட்டணம் செலுத்தாதது உள்ளிட்ட காரணங்களுக்காகவும் குழந்தைகளை சிலர் பள்ளிக்கு அனுப்பவில்லை.
காரைக்காலிலும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் முக கவசம் அணிந்தபடி உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்றனர். உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின் வகுப்பறைகளுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், பல்வேறு அரசு பள்ளிகளுக்கு நேரில் சென்று, பள்ளி நிர்வாகம் அரசு அறிவுறுத்தியபடி செயல்படுகிறதா? என ஆய்வு செய்தார்.
நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் முதல்கட்டமாக சுழற்சி முறையில் 1, 3, 5, 7-ம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4, 6, 8-ம் வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் நடைபெறும்.
விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு சென்று பாடங்களில் தங்களுக்கு உள்ள சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் ஆசிரியர்கள் அனைத்து நாட்களிலும் முழுவதுமாக பணியில் இருப்பார்கள்.
வரும் 18-ந்தேதி முதல் வகுப்புகள் அனைத்தும் வழக்கமான பணி நேரங்களில் முழு நேரமும் செயல்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.