சென்னை விமான நிலையத்தில், 9 மாதங்களில் ரூ.3½ கோடி போதை பொருட்கள் பறிமுதல்; கல்லூரி மாணவர்கள் உள்பட 20 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் கடந்த 9 மாதங்களில் ரூ.3½ கோடி மதி்ப்புள்ள போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-01-04 23:34 GMT
போதை பொருட்கள் பறிமுதல்
போதை பொருட்கள் கடத்தல்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டதாக 10 வழக்குகளில் ரூ.7.25 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா, போதை பவுடர்கள் சிக்கியது.

ஆனால் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று வரை சென்னை விமான நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தல் பெருமளவு அதிகரித்து விட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் பன்னாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டு, சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கடந்த 9 மாதங்களாக சரக்கு விமானங்களில் போதை பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி அமோகமாக நடந்துள்ளன.

ரூ.3.42 கோடி
சென்னை விமான நிலையத்தில் கடந்த 9 மாதங்களில் சுங்கத் துறை இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் போதை பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக 100 வழக்குகள் பதிவு செய்துள்ளனா்.

இந்த வழக்குகளில் ஒரு பெண், கல்லூரி மாணவர்கள் உள்பட 20 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனா். இந்த வழக்குகளில் ரூ.3 கோடியே 42 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

கடும் நடவடிக்கை
சமீப காலமாக போதை பொருள் கடத்தும் முக்கிய முனையமாக சென்னை விமான நிலையம் மாறி உள்ளது. வெளிநாடுகள், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் சென்னையை மையமாக வைத்து இந்த கடத்தலில் ஈடுபடுகின்றனா்.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இளைஞா்கள் பெருமளவு போதைக்கு அடிமையாகி இருப்பதால் விற்பனை அதிகமாக இருப்பதும், கடத்தலுக்கு சென்னை மிகவும் வசதியாக இருப்பதுவும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இதுபற்றி சுங்க இலாகா அதிகாரிகள் கூறும்போது, சென்னை விமான நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தலை முழுமையாக தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் காரணமாக சமீபகாலமாக போதை பொருட்கள் கடத்தல் கட்டுபடுத்தப்பட்டு உள்ளது. ஆன்-லைன் மூலம் வெளிநாடுகளில் சுலபமாக கிடைப்பதால் அவற்றை சரக்கு தபால் மூலம் கடத்திய சம்பவங்களே அதிகமாக நடைபெற்று உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்