கருணாநிதியை மறந்து விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் என்றுமே முதல்-அமைச்சர் ஆக முடியாது மு.க.அழகிரி ஆவேச பேச்சு
கருணாநிதியை மறந்து விட்டார்கள். மு.க.ஸ்டாலின் என்றுமே முதல்-அமைச்சர் ஆக முடியாது என்று மு.க.அழகிரி ஆவேசமாக பேசினார்.
மதுரை,
முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, தி.மு.க.வில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு நீக்கப்பட்டார். அதன்பின் அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இருந்தாலும், அடிக்கடி அரசியல் கருத்துக்களை கூறி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த அழகிரி, வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் என்றும், ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்பேன் என்றும் கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக மு.க.அழகிரி, நேற்று மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள ஒரு மகாலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்திருந்தனர்.
அவர்கள் மத்தியில் மு.க.அழகிரி பேசியதாவது:-
சதிக்காரர்கள், துரோகிகளை எதிர்ப்பதற்கான முதல் படிக்கட்டு இந்த கூட்டம். முரசொலி நிர்வாக பொறுப்பை ஏற்பதற்காக எனது தந்தை கருணாநிதி சொல்லி மதுரைக்கு வந்தேன். அன்றிலிருந்து கட்சி பணியையும் ஆற்றி வருகிறேன். என்றைக்கும் நான் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. தென்மாவட்டம் முழுவதும் கட்சி பணி ஆற்றினேன். 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் நடந்த மதுரை மத்திய, மேற்கு தொகுதிகளில் தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்றது. மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தான் ஜெயிக்கும், அது எம்.ஜி.ஆர். தொகுதி என்று என்னிடம் கூறினார்கள். ஆனால் அப்போது தி.மு.க. கூட்டணி சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே.ராஜேந்திரனை எம்.ஜி.ஆர். வாங்கிய ஓட்டை விட அதிக ஓட்டு வாங்கி வெற்றி பெற வைத்தேன்.
பொருளாளர் பதவி
திருமங்கலம் இடைத்தேர்தலில் பணியாற்ற விருப்பம் இல்லாமல் ஒதுங்கி இருந்தேன். ஆனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த கட்சி நிர்வாகிகள் எனது இல்லத்திற்கு வந்து நீங்கள் தான் திருமங்கலம் இடைத்தேர்தலில் பணியாற்ற வேண்டும். கருணாநிதியின் விருப்பமும் அதுவே என்றனர். அதன் பின் தான் திருமங்கலம் இடைத்தேர்தலில் பணியாற்றினேன். திருமங்கலத்தில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றேன். அதே போல் வெற்றி பெற்றோம். திருமங்கலம் பார்முலா என்று இந்தியாவே சொன்னது. அந்த திருமங்கலம் பார்முலா, என்பது எங்களது உழைப்பு தான். திருமங்கலத்தில் தி.மு.க. வெற்றி பெற வில்லை என்றால் அன்றே காங்கிரஸ் கட்சி தி.மு.க.வை கழற்றி விட்டு இருக்கும்.
மதுரையில் முதல் வெற்றி
அதைத்தொடர்ந்து திருச்செந்தூர் இடைத்தேர்தலில் அனிதா ராதாகிருஷ்ணன் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று சொல்லி தேர்தல் பணியை தொடங்கினேன். அதே போல் 54 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தேன். 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும். அங்கு தி.மு.க. வெற்றி பெறாது என்றார்கள்.
ஆனால் நான் கன்னியாகுமரியை பெற்று கொண்டு நெல்லையை கூட்டணியான காங்கிரசுக்கு தந்தோம். அப்போது கன்னியாகுமரியில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். அதே போல் மதுரையில் நான் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். மதுரையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் தி.மு.க. நாடாளுமன்ற வேட்பாளர் நான் தான். அப்போது தென்மண்டலத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட தென்காசி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
ஸ்டாலினுக்கு பக்கபலம்
திருமங்கலத்தில் வெற்றி பெற்றவுடன், எனக்கு தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியை கொடுத்தார்கள். அதனை கூட நான் முதலில் மறுத்தேன். ஆனால் கருணாநிதியின் உத்தரவால் அந்த பதவியை ஏற்றுக்கொண்டேன். ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோர் எனது வீட்டிற்கு வந்து மு.க.ஸ்டாலினுக்கு நீங்கள் தான் கருணாநிதியிடம் சொல்லி பொருளாளர் பதவி வாங்கி தர வேண்டும் என்றார்கள். உடனே நான் எனது தந்தை கருணாநிதிக்கு போன் செய்து மு.க.ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி தாருங்கள் என்றேன். அதன்படி அன்றே மு.க.ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி கிடைத்தது.
மறுக்க முடியுமா?
மதுரையில் உள்ள எனது வீட்டிற்கு மு.க.ஸ்டாலின் வந்திருந்தார். அப்போது நான் அவரிடம் தந்தைக்கு பின் தான் பொறுப்பேற்க வேண்டும். அதற்கு நான் பக்கபலமாக இருப்பேன் என்று சொன்னேன். இது ஸ்டாலின் மனசாட்சிக்கு தெரியும். இதனை ஸ்டாலினால் மறுக்க முடியுமா?. அப்படி நினைத்து இருந்த எனக்கு துரோகம் செய்து விட்டனர். ஏன் துரோகம் செய்தார்கள் என்று தெரியவில்லை. நான் எப்போதும் பொய் பேச மாட்டேன். என்னால் பலன் அடைந்ததி.மு.க. மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் நன்றி இல்லாமல் போய் விட்டது.
போஸ்டர் அடித்தது தவறா?
தி.மு.க.வில் நடந்த உட்கட்சி தேர்தல் முறைகேடுகளை சுட்டி காட்டினேன். இது குறித்து கருணாநிதியிடம் புகார் கூறினேன். உடனே அப்போது அவர் சண்முகசுந்தரத்தை அழைத்து என்னப்பா நடக்கிறது என்றும், இதனை சரி செய்யுங்கள் என்றும் கூறினார். நானும் அப்போது வெளிநாடு புறப்பட்டு சென்று விட்டேன். அந்த சமயத்தில் கட்சி பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது எனது ஆதரவாளர்கள் பொதுக்குழுவே வருக என்று என்று போஸ்டர் அடித்தனர். உடனே அந்த நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கினர். கட்சியினர் போஸ்டர் அடித்தது ஒரு தவறா? ஏன் ஸ்டாலினுக்கு கூட கருணாநிதி இருக்கும் போதே வருங்கால முதல்வரே என்று போஸ்டர் அடித்தனர். ஸ்டாலின் என்றுமே முதல்-அமைச்சர் ஆக முடியாது. என்னுடைய ஆதரவாளர்கள் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக விட மாட்டார்கள்.
என்ன முடிவு?
கருணாநிதியிடம் என்னை பற்றி தவறான தகவல்களை சொல்லியே கட்சியை வீட்டு நீக்க செய்தனர். என்னை நீக்கிய பின்பு நான் எனது மனைவி, மகன் ஆகியோர் கருணாநிதியை சந்தித்தோம். அப்போது அவர், அவர்களது (ஸ்டாலின்) ஆட்டம் அடங்கட்டும். அதுவரை பொறுமையாக இரு என்று கூறினார். ஆனால் அதற்குள் நம்மை விட்டு கருணாநிதி பிரிந்து விட்டார். கருணாநிதி போல் மு.க.ஸ்டாலின் பேசுகிறார் என்று தி.மு.க.வில் உள்ள ஒருதலைவர் வாய்கூசாமல் கூறுகிறார். கருணாநிதியின் பேச்சு, எழுத்து, திறமை யாருக்குமே கிடையாது. அப்படி இனி ஒருவர் இனி பிறக்க போவதும் கிடையாது. தி.மு.க.வில் கருணாநிதியை மறந்து விட்டார்கள். அவர்களுக்கு நாம் கருணாநிதியை நினைவுப்படுத்துவோம். நாம் எல்லாம் கருணாநிதியின் உயிர். நான் உங்களது தொண்டன். இந்த தொண்டன் உங்களுக்காக இருக்கிறான் என்பதனை நீங்கள் மறந்து விட வேண்டாம்.
விரைவில் முடிவு
நான் கடந்த 7 ஆண்டுகளாக பொறுமையாக இருக்கிறேன். ஆனால் எத்தனை நாட்கள் பொறுமையாக இருப்பது. நான் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கீர்கள்? (அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் உங்களது எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வோம் என்று கோஷம் எழுப்பினர்) . பலரும் கட்சி தொடங்க வேண்டும் உள்பட பல ஆலோசனைகளை தந்தனர். ஆனால் விரைவில் எனது முடிவினை அறிவிப்பேன். அதனை நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த முடிவுக்கு காலதாமதம் கூட ஆகலாம். அதுவரை நீங்கள் பொறுத்திருக்க வேண்டும்.
இங்கு எனக்காக கூடியுள்ளீர்கள். ஒவ்வொரு கூட்டம் முடிந்தவுடன் கருணாநிதி தொண்டர்கள் பத்திரமாக ஊர் திரும்ப வேண்டும் என்று சொல்லுவார். அது போல் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் பத்திரமாக ஊர் சென்ற தகவல் எனக்கு வர வேண்டும். உங்களது பாதங்களை வணங்கி நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரவேற்பு
முன்னதாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மு.க.அழகிரி தனது வீட்டில் இருந்து பிரசார வாகனத்தில் புறப்பட்டு வந்தார். வழிநெடுகிலும் அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு சுமார் 1,000 பேர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் பல ஆயிரம் பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்திருவர்களின் வாகனம், மண்டபத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை அணிவகுத்து இருந்தது. அதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
மேலும் மண்டபம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்ததால், கூட்டத்திற்கு வந்தவர்கள் நான்குவழிச்சாலையில் நின்று கொண்டு அழகிரியின் பேச்சை கேட்டனர். கூட்ட மேடைக்கு அழகிரி, சுமார் 4 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வழிநெடுகிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாலை 5.50 மணிக்கு தான் மேடைக்கு வந்தார். அதே போல் மேடையிலும் தொண்டர்கள் அதிக அளவில் இருந்தனர். அவர்களை அங்கிருந்து கீழே இறக்கிய பின்பு சுமார் 6.30 மணிக்கு அழகிரி தனது பேச்சை தொடங்கினார். கூட்டத்தில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, முன்னாள் மேயர் தேன்மொழி கோபிநாதன், துணை மேயர் மன்னன், முன்னாள் மண்டல தலைவர் இசக்கி முத்து,உள்பட பலர் கலந்து கொண்டனர்.