மாவட்டம் முழுவதும் குரூப்-1 தேர்வை 2,944 பேர் எழுதினர் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 2,944 பேர் எழுதினர். கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

Update: 2021-01-04 04:51 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குரூப்-1 பதவிக்கான முதன்மை தேர்வு நேற்று திருவண்ணாமலையில் 5 கல்லூரிகள் மற்றும் 2 பள்ளிகளில் அமைக்கப்பட்ட 17 மையங்களில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்பட 5,466 பேர் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தேர்வில் 11 கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்பட 2,944 பேர் தேர்வு எழுதினர். 2,522 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு மையங்களில் போலீசார் மூலம் உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கலெக்டர் ஆய்வு

இத்தேர்வுப் பணிக்காக 17 முதன்மை கண்காணிப்பாளர்களும், 3 நடமாடும் குழுக்களும், 18 வீடியோ கிராபர்களும் பணியமர்த்தப்பட்டனர். மேலும் தேர்வு மையங்களில் சுகாதாரத்துறை மூலமாக கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேர்வர்களுக்கு கைகளுக்கு சானிடைசர்ஸ், முகக்கவசம் போன்றவை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது திருவண்ணாமலை கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அரிதாஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்