கவர்னருக்கு எதிராக பிரசாரம் தொடக்கம்: புதுச்சேரியை விட்டு வெளியேறும் வரை போராட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு

கவர்னர் கிரண்பெடி புதுவையை விட்டு வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Update: 2021-01-04 00:39 GMT
புதுச்சேரி, 

புதுச்சேரி கனகசெட்டிக் குளத்தில் ‘புதுச்சேரியை காப்போம் மீட்போம், மோடியே திரும்பப்பெறு கிரண்பெடியை, சர்வாதிகாரி கிரண்பெடியே திரும்பி போ’ ஆகிய கோ‌‌ஷத்துடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் பிரசார பயண கூட்டம் நடைபெற்றது.

பிரசாரத்துக்கு புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி பிரசார கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் அமைச்சர்கள் கந்தசாமி, ‌ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா கலைநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், ம.தி.மு.க. கபிரியேல், ரா‌‌ஷ்டீரிய ஜனதா தளம் சஞ்சீவி உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

கவர்னர் கிரண்பெடி மாநில மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார். மாநில வளர்ச்சி மீது அவருக்கு அக்கறை கிடையாது. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முட்டுக்கட்டை போடுகிறார். கவர்னரின் தடைகள், முட்டுக்கட்டைகளையும் எதிர்த்து ஆட்சியாளர்கள் மாநில வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறோம். பிரதமரும், கவர்னருக்கு ஆதரவாக செயல்படுகிறார். முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோரை கவர்னர் மதிப்பதில்லை. அப்படிப்பட்ட கவர்னர் புதுவை மாநிலத்திற்கு தேவையா? கிரண்பெடி மக்களுக்கு வெகுஜன விரோதியாக உள்ளார்.

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, சனிப்பெயர்ச்சி ஆகிய விழாக்களை நடத்தக்கூடாது என கவர்னர் உத்தரவிட்டார். சனிப்பெயர்ச்சி விழா நடத்த நீதிமன்றத்தை நாடினோம்.

புதுவை மாநில மக்களுக்கு துரோகியாகவும், விரோதியாகவும் செயல்படும் கவர்னர் கிரண்பெடியை கண்டித்து வருகிற 8-ந் தேதி காலை 9 மணி முதல் கவர்னர் மாளிகை முன்பு தொடர் போராட்டம் நடத்தப்படும்.

புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கும் எண்ணம் இல்லை என மத்திய மந்திரி கூறுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான உரிமையை மத்திய அரசு பறிக்கிறது. மின்துறை தனியார் மயம், மில்கள், அரசு அச்சகங்கள் மூடப்பட்டுள்ளன.

புதுச்சேரியை, தமிழகத்துடன் பிரதமர் நரேந்திரமோடி எந்த நேரத்திலும் இணைத்து விடுவார். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் உரிமையை காப்பாற்ற அனைவரும் ஒரே அணியில் இணைந்து போராட வேண்டும். கவர்னர் கிரண்பெடி புதுச்சேரியை விட்டு வெளியேறும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்