ஜோலார்பேட்டை அருகே, கூலி தொழிலாளி கொலையில் அண்ணன் உள்பட 7 பேர் கைது - போலீஸ் விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம்

ஜோலார்பேட்டை அருகே கூலித் தொழிலாளி ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது அண்ணன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-01-03 11:03 GMT
ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி ஊராட்சி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 42). கூலித்தொழிலாளியான இவர் கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை மாலை மோட்டார்சைக்கிளில் பார்த்திபன் வந்து கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி அனுமுத்து என்பவர் எதிரே வந்துள்ளார். அப்போது வாகனங்களுக்கு வழி விடுவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது. பின்னர் கட்டப்பஞ்சாயத்து நடக்க இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் பார்த்திபன் மேட்டுச்சக்கரகுப்பம் பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காந்தி நகர் பகுதியில் ஊருக்கு வெளியில் ஆள் நடமாட்டமில்லாத செங்கல் சூளை அருகே ஆட்டோவில் காத்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் தலைமீது சரமாரியாக வெட்டியுள்ளனர்.

பார்த்திபன் தப்பித்து ஓட முயன்றபோதும் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ மூலம் கும்பல் தப்பி விட்டது. சத்தம்கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்..

தகவல் அறிந்து வந்த பார்த்திபனின் மனைவி ஜோதி ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு, இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் பார்த்திபனின் மனைவி ஜோதியிடம் விசாரித்தபோது முன் விரோதம் காரணமாக கணவரை கொன்றிருக்கலாம் என 15 பேருக்கும் மேற்பட்டோரின் பெயரை கூறினார்.

அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து பால் வியாபாரி அனுமுத்து (65), அருள் (41), சேட்டு (36), பார்த்திபனின் அண்ணன் ஆஞ்சி (65) ஆகிய நான்கு பேரை பிடித்தனர். அதனை தொடர்ந்து இதில் தொடர்புடைய செல்வம், மணி, வினோத் ஆகிய 3 பேர் சிக்கினர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகின. கடந்த சனிக்கிழமை பார்த்திபன் மோட்டார்சைக்கிளில் வந்தபோது அவருக்கும் இவர்களுக்கும் ஏற்பட்ட வழி தகராறில் மேற்கண்ட 11 பேரும் பார்த்திபனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு பார்த்திபன் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது அனுமுத்து, அருள், சேட்டு, ஆஞ்சி ஆகிய 4 பேரும் மோட்டார்சைக்கிளை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் பார்த்திபனை சரமாரியாக தலைமீது வெட்டியுள்ளனர். மற்ற 7 பேரும் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தொலைவில் ஆள் நடமாட்டத்தை கண்காணித்து வந்ததாக தெரிவித்துள்ளனர். இதையே அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறினர்.

இதனையடுத்து பால் வியாபாரி அனுமுத்து, அருள், சேட்டு, ஆஞ்சி, செல்வம் (69), மணி (57), வினோத் (30) உள்பட 7 பேரை ஜோலார்பேட்டை போலிசார் நேற்று கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள காந்தி, ஆதித்யன், தணிகை, பாபு உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்