மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-01-03 06:22 GMT
காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள தொண்டமாநத்தம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக இங்குள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இக்கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, அதில் ஒரு சிலருக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டதாக தெரிகிறது. மற்றவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என தெரிகிறது.

முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் நேற்று காலை காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விடுபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் தாசில்தார் ராமதாசிடம் சென்று மனு கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்